Mahasankara Matrimony







‘‘ஏங்க... ரெண்டு பால் பாக்கெட்டு வாங்கிட்டு வாங்க...’’

18/09/2020
‘‘ஏங்க... ரெண்டு பால் பாக்கெட்டு வாங்கிட்டு வாங்க...’’

- சமையல்கட்டில் இருந்து மனைவி உத்தரவிட்டாள்.

பால் பாக்கெட்டு வாங்கி வரச் சொன்னால், சத்தம் போடாமல் போய் விடுவேன். ஏதாவது எதிர்த்துப் பேசினால், அப்புறம் காபி கிடைக்காது.

பால் பாக்கெட்டுகள் போடுவதற்கு ஒரு கல்யாணப் பை, பணம், முகத்துக்கு மாஸ்க் போட்டுக் கொண்டு வெளியேறினேன். வீட்டுக்குப் பக்கத்தில் கடை.

பத்து நிமிடங்களில் வீட்டுக்குத் திரும்பினேன்.

பால் பாக்கெட்டுகள் இருக்கிற கல்யாணப் பையை டைனிங் டேபிளில் வைத்தேன்.

சமையல்கட்டில் இருந்து தோசைக் கரண்டியுடன் வேகமாக வந்த மனைவி, ‘‘ஏங்க... இதைக் கொண்டு போய் டைனிங் டேபிள்ல வைக்கறீங்க... எடுத்துக் கீழே ஓரமா வையுங்க. நியூஸெல்லாம் பாக்கறதில்லியா?’’ என்றாள்.

எடுத்து வைத்தேன்.

‘‘பால் பாக்கெட்டை மட்டும் எடுத்து ஸிங்க்ல போடுங்க...’’

போட்டு விட்டுப் பையைக் கொண்டு போய் ஒரு ஆணியில் மாட்டி வைத்தேன். அங்கு காணப்படுகிற வெவ்வேறு ஆணிகளில் ஐந்தாறு பைகள் ஏற்கெனவே மாட்டப்பட்டிருந்தன.

‘‘ஏங்க... பையைக் கொண்டு போய் அப்படியே மாட்டி வைக்கறீங்க... தலைலதான் அடிச்சுக்கணும். அதை பாத்ரூம்ல போடுங்க. அலம்பணும். நியூஸ் பாக்கறதில்லியா?’’

போட்டேன்.

‘‘எங்கே மாஸ்க்?’’

‘‘சட்டைப் பைக்குள்ள இருக்கு’’ என்றேன்.

‘‘ஏங்க... வெளில போட்டுண்டு போன மாஸ்க்கைக் கழட்டி சட்டைப் பைல வெச்சிருக்கீங்களே... பைக்குள்ள இன்னும் என்னென்ன இருக்கோ... எல்லாமும் க்ளீன் பண்ண வேண்டாமா?’’

‘‘சட்டைப் பைக்குள்ள வேற ஒண்ணும் இல்லேம்மா.’’

‘‘வந்தவுடனே கையை லிக்விட் போட்டுக் கழுவினீங்களா?’’

‘‘இல்லே... மறந்துட்டேன்.’’

‘‘ஏங்க... எத்தனை தடவை சொல்றது... வெளில போயிட்டு வந்தா உடனே கையைக் கழுவணும்னு.’’

கழுவினேன்.

மாடியேறப் போனேன்.

‘‘மாஸ்க் எங்கேங்க?’’

‘‘அதான் சொன்னேனே... சட்டைப்பைக்குள்ள இருக்கு.’’

‘‘மாடில அதை அலசிப் போட்டுட்டுத் திரும்பவும் கையை லிக்விட் போட்டுக் கழுவுங்க.’’

‘‘சரிங்க...’’ என்று மனைவியிடம் சொல்லி விட்டு மாடிப்படி ஏறும்போது தோன்றியது.

‘ரெண்டு பால் பாக்கெட்டுக்கே எனக்கு இந்தப் பாட்டுன்னா, மளிகை சாமான் - காய்கறில்லாம் வாங்கிட்டு வர்றவங்க பாடு எப்படியெல்லாம் இருக்குமோ? கடவுளே... எப்படா இதுக்கு விடிவுகாலம்...?!’

- பி. சுவாமிநாதன்