பெரியவா பக்தி, புதிது புதிதாகப் பலரிடமும் பெருகி வருகிறது என்பது அந்த மகானின் கிருபையே! இவர்களில் பலரும் போன் மூலம் அடியேனிடம் பேசி வருவது, அவர்களிடம் இருக்கக் கூடிய குரு பக்தியையும், இறை நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
உதாரணத்துக்கு, இன்றைய தினம் அடியேனுக்கு வந்த சில போன்கால்கள்... இவர்கள் அனைவருமே அடியேன் யூ டியூப்பில் தினமும் வழங்கும் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவைக் கேட்பவர்கள்.
கடலூரில் வசிக்கும் ஒரு மாணவன் (பாண்டி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படிக்கிறான்) மதியம் போன் செய்தான். ‘அங்க்கிள்... மகா பெரியவா பூஜை இன்னிக்குப் பண்ணப் போறேன். எப்படிப் பண்ணணும்?’ என்று கேட்டான். அவனுக்கு ஏற்றாற்போல் சொன்னேன். மிகவும் பரவசப்பட்டவன், ‘நானும் அனுஷ நட்சத்திரம்தான் அங்க்கிள்’ என்றான் உற்சாகமாக. வருங்கால டாக்டரை வாழ்த்தினேன்.
பல்லாவரத்தில் இருந்து ஒரு டீச்சர் பேசினார். இளம் வயதுதான். தற்போது பணி புரியும் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். எத்தனையோ சிரமத்துக்கு இடையிலும் சின்சியராக வகுப்புகள் எடுத்து வருவதாகச் சொன்னார். பாவம், பள்ளியில் இருந்து போதிய அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார். மகா பெரியவாளையே தான் பிரார்த்தித்து வருவதாகவும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து விடும் என்று நம்புவதாகவும் சொன்னார். வாழ்த்துகள் டீச்சர்.
சோழவந்தானில் இருந்து ஒரு பெண்மணி. குடும்பம் ஏகத்துக்கும் கடன்பட்டிருப்பதாகவும், வீடு ஜப்தி நிலைக்கு வந்திருப்பதாகவும், இதில் இருந்து மீள்வதற்கு பெரியவா அருளால் ஒரு கால அவகாசம் கிடைத்திருக்கிறது என்றும் சொன்னார். ‘இன்னும் கொஞ்ச நாள்ல பணம் ஏதேனும் வகையில வந்து வீட்டை மீட்கணும்’ என்றார் தழுதழுத்த குரலில். ‘கவலைப்படாதீங்க... உங்க கோரிக்கையைப் பெரியவாளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்’ என்றேன்.
உலகமே நம்பிக்கையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கை.
நாமும் ஒரு நம்பிக்கையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இது பெரியவா நம்பிக்கை.
நடப்பது எல்லாமே இனி நன்றாகவே நடக்கட்டும் - எல்லோருக்கும்!
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்