இன்று உலக முதியோர் தினம்.
என்னைப் பொறுத்தவரை முதுமை என்பது வயதில் இல்லை. மனதில் இருக்கிறது.
நாற்பது வயதைத் தாண்டுகிற பலரும் கவலைப்பட்டு, பயப்பட்டு, சோம்பேறித்தனப்பட்டு, பொறாமைப்பட்டு - இப்படிப் பல ‘பட்டு’களால் இளமையிலேயே முதுமையை அடைகிறார்கள்.
எழுபது வயதைத் தாண்டுகிற பலரும் உற்சாகப்பட்டு, சாந்தப்பட்டு, நிதானப்பட்டு, தைரியப்பட்டு - இப்படிப் பல ‘பட்டு’களால் முதுமையில் இளமையை அடைகிறார்கள்.
இளமையில் சலித்துக் கொள்வதும், முதுமையில் சாதனை படைப்பதும் இன்று சகஜம்.
போன நவம்பரில் கனடா சென்றிருந்தேன். சென்னையில் இருந்து ஹாங்காங் போய் அங்கிருந்து ஃப்ளைட் மாற வேண்டும். கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்துக்கு மேல் ஹாங்காங் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டிய சூழல் (டிரான்ஸிட்).
ஆனால், சற்றும் போரடிக்கவில்லை. ஏர்போர்ட்டில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்ததில் - வேடிக்கைப் பார்த்ததில் பொழுது போனதே தெரியவில்லை.
அங்கே நான் பார்த்த ஒரு காட்சி வித்தியாசமானது. எத்தனை வருடம் ஆனாலும் மனதில் இருந்து அகலாது.
முதியோர்களைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பார்கள்.
ஆனால், ஒரு முதியவர் இளைய வயதுடைய ஒருவரைக் கைப்பிடித்துக் கூட்டி வந்தார். நான் அமர்ந்திருந்த அந்தப் பகுதியில் என் அருகே ஒரே ஒரு சாய்வு நாற்காலி மட்டும் காலியாக இருந்தது. அந்த நாற்காலியில் இளைய வயதுடையவரை அமர வைத்தார் முதியவர். இளைய வயதுடையவர் ஏனோ சற்றுத் தளர்வாகக் காணப்பட்டார். ஒருவேளை உடல்நிலை சரியில்லையோ, என்னவோ!
வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? முதியவருக்கு வயது 80 ப்ளஸ். இளையவருக்கு வயது 40 ப்ளஸ். தன் உறவுக்காரப் பையனான அவனுடன் சீனாவுக்குப் பயணிக்கிறார்.
நான் அமர்ந்திருந்த ஸீட்டில் இருந்து எழுந்து முதியவரை அமரச் சொன்னேன். அமர மறுத்து விட்டார் முதியவர். வற்புறுத்திப் பார்த்தேன். என்னைப் போல் அங்கே அமர்ந்திருந்த பலரும் அவரை கெஞ்சிக்கூடக் கேட்டுக் கொண்டார்கள். ஊஹும்... மனுஷன் மசியவில்லை.
அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
‘‘வயசானவங்க வயசானவங்கன்னு பார்த்து உலகம் எங்களுக்கு சலுகை குடுக்குது. ரயில்ல போனா முன்னுரிமை. ஃப்ளைட்ல போனா முன்னுரிமை. எங்கே க்யூல நின்னாலும் முன்னுரிமை. என்னைப் பொறுத்தவரை எதையும் நான் பயன்படுத்த மாட்டேன். அப்படிப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், அதற்கே பழகிப் போய் விடுவேன். எந்த ஒரு சலுகையையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதால், எண்பதைக் கடந்தும், நான் இளமையாகவே இருக்கிறேன்’’ என்று சொல்லிச் சிரித்தார். அமர்ந்திருந்த பலரும் கைதட்டி, முதியவரை உற்சாகப்படுத்தினார்கள்.
முதுமை என்பது வயதில் அல்ல... மனதில்! மீண்டும் சொல்கிறேன்.
வயதில் முதியோர்களே... மனதால் இளையோர்களே... வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்