Mahasankara Matrimony







இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான்!

11/11/2020
இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான்!

பக்தியின் முதுகெலும்பும் கிராமங்கள்தான்!

வீட்டு வாசலில் சாணி தெளித்து நித்தமும் கோலம்... பசும்பால், எருமைப்பால்... அன்றன்று விளையும் காய்கறி... எல்லாவற்றையும் அனுபவித்தவர்கள்தான் நாம்!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை உற்சாகங்களை கிராமங்களில்தான் அதிகம் பார்க்க முடியும்.

பச்சைப் பசேல் என்ற பயிர்களும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நீர்நிலைகளும், அண்ணாந்து பார்க்க வைக்கும் ராஜகோபுரம் கொண்ட பழைய ஆலயங்களும், பட்சிகளின் பாசக் குரல்களும்... மறக்க முடியுமா? குதியாட்டம் போட்டு விளையாடிய தெருக்கள் ஆயிற்றே! பசுமையான அந்த நாட்கள் நமக்குள்ளே ஒரு அமைதியை, ஆனந்தத்தை, சந்தோஷத்தை பிஞ்சு மனதில் விதைத்தவை.

காலம், சூழல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த உடன், விதம் விதமான மனிதர்களைப் பார்த்தோம். பரபரப்பைப் பார்த்தோம். கூப்பிட்டால் எவரும் நிற்காமல் ஓடுகிற அவசரத்தைப் பார்த்தோம். நகர வாழ்க்கை வேறு உலகம்.

ஆம்! நகரத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு வந்தோம். கிடைப்பனவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டோம். அதற்கு ஏற்ப வாழப் பழகிக் கொண்டோம்.

எறும்பு ஊறக் கல்லும் தேயும்.

கிராமங்கள் வளர, இந்தியாவும் வளரும்.

ஏற்கெனவே அடியேனது ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மீண்டும் அதைக் குறிப்பிடுகிறேன்.

சென்னையில் இருக்கிற ஒரு பத்துப் பேரில் ‘உங்களது சொந்த ஊர் எது?’ என்று கேட்டுப் பாருங்கள். கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என்று பெரிய ஊரைச் சொல்வார்கள். அல்லது அதற்கு அருகே இருக்கிற கிராமத்தின் பெயரைக் குறிப்பிடுவார்கள். சென்னையில் வசிக்கிற பலருக்கும் சென்னை சொந்த ஊர் அல்ல. வாழ வந்த ஊர். வாழ வைக்கும் ஊர்.

வாழப் போன இடத்தில் தன் இல்லத்தில் கற்றுக் கொண்ட நல்லனவற்றைப் பின்பற்றி நடந்தால்தான், ஒரு பெண்ணுக்கு நற்பெயர் கிடைக்கும். நல்ல மருமகள் என்று புகழப்படுவாள்.

கிராமத்தை விட்டு வந்தோமே தவிர, கிராமத்தில் கற்றுக் கொண்ட நல்ல பழக்கங்களையும் விட்டு விட்டோம்.

கிராமத்தில் ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றால், ஊரே கூடி விடும்.

நகரத்தில் யாருக்காவது ஏதாவது என்றால், அடுத்த வீட்டுக்காரரே கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அரைகுறையாக ஜன்னல் கதவைத் திறந்து வைத்து வேடிக்கைப் பார்ப்பார்.

கிராமத்தில் இயற்கையாக மலரும் புன்னகை, நகரத்தில் செயற்கையாகத்தான் மலருகிறது.

மொத்தத்தில் கைநாட்டு கல்ச்சர் கிராமத்தில். கார்ப்பரேட் கல்ச்சர் நகரத்தில்.

நான் அடிக்கடி கும்பகோணம் செல்வதே, அருகில் இருக்கும் பல கிராமங்களின் வழியே பயணிக்கும் சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான். அங்கே இருக்கும் ஆலயங்களைத் தரிசிப்பதற்காகத்தான்! அங்கே இருக்கும் மனிதர்களின் முகங்களைப் பார்ப்பதற்காகத்தான்!

கொரோனா தாக்கம் சென்னையில் சூடு பிடித்தபோது கிராம வாழ்க்கையின் ருசியைப் பலரும் உணர்ந்தார்கள். பெட்டிப் படுக்கையோடு டூ வீலர், கார்களில் இடம் பெயர்ந்தார்கள். பல மாதங்களை சொந்த கிராமத்தில் கழித்தார்கள்.

வருடத்தில் ஒரு முறை அல்லது இரு முறை எப்படி ஏதேனும் உல்லாச டூர் போகிறோமோ, அதுபோல் வருடத்தில் ஒரு முறை பிள்ளைக் குட்டிகளுடன் சொந்த கிராமத்துக்குப் போய் வாருங்கள்.

தோப்பு நிழல் வாசம், பம்ப் செட் குளியல், இலை போட்டுச் சாப்பிடுவது, கிராமக் கோயில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது, பழைய பாச உறவுகளைப் பார்த்துப் பேசுவது என்று ஒரு நாலைந்து நாள் இருந்து பாருங்கள்...

அந்த உற்சாகம் அடுத்த ஆறு மாதத்துக்கு கியாரண்டி!

நீங்கா நினைவுகளுடன்...
பி. சுவாமிநாதன்