பிடிக்கவில்லை என்றாலும், சில விஷயங்களை ஏற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும்.
நமக்கு மிகவும் பிடித்திருந்தா கொரோனாவைக் கூடவே வைத்துக் கொண்டிருக்கிறோம்?
மாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா ஓடின வழியாகக் காணோம். மாறாக, உலகம் முழுக்கக் கூடாரம் போட்டுக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது.
காலண்டரில் அச்சிடப்பட்ட பண்டிகைகள் கொரோனாவைப் பார்த்துப் பயப்படுமா, என்ன?
நவராத்திரி, தீபாவளி வந்தது. உற்சாகம் மெள்ளத் தலைதூக்கியது.
‘சரி, கொரோனா அப்படித்தான் இருக்கும் போலிருக்கு. அது அதன் வேலையைப் பார்க்கட்டும். நம்ம வேலையை நாம ஜாக்கிரதையா பாத்துப்போம்’ என்று புத்தாடை எடுத்தோம்; பட்டாசு வெடித்தோம்; பட்சணங்களை ஒரு பிடி பிடித்தோம்.
‘நிபர் புயல்’ நமக்குப் பிடித்தா வரவழைத்திருக்கிறோம்?
இல்லை. அது வர வேண்டிய வேளை. வந்திருக்கிறது. என்னென்ன ஆட்டம் ஆடணுமோ, ஆடிட்டு ‘அப்ஸ்காண்ட்’ ஆயிரும்.
நாம பத்திரமா வீட்டுல இருந்துக்கணும்.
இது புரிஞ்சா போதும். அவ்வளவுதான் வாழ்க்கை.
பிறப்பு - இறப்பு, இன்பம் - துன்பம், வறுமை - வளமை, சுகம் - சோகம்...
இவை எல்லாம் எப்போது வரும்... எப்போது போகும்? எவருக்கும் தெரியாது.
எல்லாவற்றையும் ஒன்றுபோலவே ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டால், நம்மை விட ஜாலியான ஆசாமி உலகத்தில் இல்லை.
நீங்கள் ஜாலியான ஆசாமியாக இருக்கத்தானே ஆசைப்படுகிறீர்கள்?!
அன்புடன்,
பி. சுவாமிநாதன்