Mahasankara Matrimony







முதுமை எனப்படுவது யாதெனில்...

12/12/2020
முதுமை எனப்படுவது யாதெனில்...

இளமை எனும் இன்பத்தைக் கடந்துதான் முதுமை எனும் பேரின்பத்தை அடைய முடியும்.

இன்பத்தை விட பேரின்பம் இனிமையானது. இளமையை விட முதுமை சுகமானது!

முதுமையை பலரும் சாபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது, வரம்!

முதுமையை சுகமாக அனுபவிக்க ஒரு மனம் வேண்டும். அது எல்லா முதியவர்களுக்கும் வாய்த்து விடுவதில்லை.

என்னுடைய மாமனார் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்திக்கு தற்போது வயது 84. படத்தில் இருப்பவர்.

இவர் ஹைகோர்ட் பணியில் இருக்கிறபோது கவனித்திருக்கிறேன். அத்தனை சுறுசுறுப்பு. எழுபதுகளின் துவக்கத்தில் இருக்கிறபோதே ஒரு அரிசி மூட்டையைத் தூக்கி வைத்து விடுவார்.

அப்போது ஒரு சைக்கிள் வைத்திருந்தார். லோக்கல் விஷயங்களுக்கு சைக்கிள்தான் (இந்த சைக்கிளை இப்போது நான் ஓட்டி வருகிறேன். இது பற்றி ஒரு பதிவை ஏற்கெனவே போட்டிருக்கிறேன்). என் மகள் சங்கரா வித்யாலயா பள்ளியில் படிக்கிறபோது முன்பக்கம் அவளை ஒரு ஸீட்டில் உட்கார்த்தி வைத்து ஓட்டிச் செல்வார்.

காலம் ஓடியது. சைக்கிள் ஓட்ட முடியவில்லை. ஸ்கூட்டி பெப் வாங்கினார். பெடல் பண்ண வேண்டிய வேலை இல்லை.

வருடங்கள் ஓடின. ஸ்கூட்டி பெப்பும் முடியவில்லை (இப்போது என் மகள் ஓட்டுகிறாள்).

முழுக்க முழுக்க வீடுதான் அவருக்கு எல்லாமே! ‘இருக்கிற இடம்தான் எனக்கு காசி, ராமேஸ்வரம், திருவையாறு’ என்று சொல்வார். முடியாமல் போன பிறகு தன் ஆசைகளைக் குறைத்துக் கொண்டார்.

திருவையாறு காவிரியில் நீச்சல் அடித்துக் குளித்தவர், இப்போது நின்று கொண்டு பாத்ரூமில் குளிப்பது சிரமம் என்பதால், உட்கார்ந்து குளிப்பதற்கு வசதியான ஒரு நாற்காலியை அமேசானில் வாங்கிக் கொடுத்தாள் என் மகள்.

தரையில் உட்கார்ந்து வாழையிலையில் வரிந்து கட்டிச் சாப்பிட்டவருக்கு, இப்போது டைனிங் டேபிள்தான். எந்தக் காய்கறியும் வேகவில்லை என்றால், கடித்துச் சாப்பிட முடியாது. இவருக்கென்றே குழைந்த சாதத்தைப் பரிமாறுகிறாள் என் மனைவி.

வாக்கிங் ஸ்டிக்கோடு வீட்டுக்குள்ளேயே வாக்கிங்!

குளித்து முடித்தவுடன் ஸ்லோகம் படித்தல். அதன் பிறகுதான் சாப்பாடு.

நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரோடு பேச உட்கார்ந்தால், உற்சாகமாகி விடுவார். காது கேட்காது. கத்திப் பேச வேண்டும்.

பழைய நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

திருவையாறு சப்தஸ்தானப் பல்லக்கு, ஸ்ரீதர ஐயாவாள் கார்த்திகை அமாவாசை ஸ்நானம் - இப்படிப் பல விசேஷங்கள் வருவதற்கு முன்னே எங்களுக்கு நினைவுபடுத்துவார்.

எங்கள் இல்லத்தில் அவருக்கு ரொம்ப பெட் - என் மகள்தான். ஏதாவது நொறுக்குத் தீனி என்றால், என் மகளிடம்தான் கேட்பார். யாரிடமும் எதுவும் கேட்டுப் பழக்கம் இல்லை. அப்படியே வளர்ந்தவர்.

தினமும் சமையலுக்கு அவர்தான் காய்கறி நறுக்கித் தருவார்.

தன் பேரன் சுப்ரமணியனுக்கு அவ்வப்போது பென்சில் சீவிக் கொடுப்பார்.

தான் பணிபுரிந்த திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற ஊர்க் கதைகளை மனைவி (என் மாமியார்) ராஜத்திடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்வார்.

தனது முதுமையையும் சுகமாக அனுபவிக்கிறார்.

இறுதி வரை இறைவன் இந்த சுகத்தை அவருக்கு வழங்க வேண்டும். அவ்வளவே பிரார்த்தனை.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்