நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவா, ஸித்தி ஆன நிகழ்வை அடியேன் எழுதிய மகா பெரியவா தொகுதி 3-ல் குறிப்பிட்டிருக்கிறேன்.
மகான் ஸித்தி அடைந்த இந்த தினத்தில் அந்தப் பதிவு இங்கே... கொஞ்சம் சுருக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: பி. சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தொகுதி-3. பதிப்பாளர்: ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்
ஜனவரி மாதம் 8-ஆம் தேதி 1994-ஆம் ஆண்டு சனிக்கிழமை மதியம் 2.58 மணிக்கு பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனார் மகா பெரியவா.
கடைசி நிமிடம் வரை இயல்பாகவே இருந்திருக்கிறார். அன்றாட அலுவல்களையும் விசாரித்திருக்கிறார். அரை நொடிக்குள் அவர் அமரர் ஆகி விட்டார் என்றனர், அன்றைய தினத்தில் அவருக்கு சேவை செய்தவர்கள்.
இந்த நிகழ்வை எத்தனையோ உபன்யாசங்களில் - மாதம் நான்கு முறை சொற்பொழிவுகள் வழங்கி வரும் அருள்மிகு மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் பேசி இருந்தாலும், இன்றைய தினம் மகானது பக்தர்களுக்காக வழங்குகிறேன்.
காஞ்சி மகா பெரியவா ஸித்தி ஆன தகவல் ஒரு சில மணி நேரத்துக்குள் உலகம் முழுக்கப் பரவியது. நாலா திசைகளில் இருந்தும் காஞ்சியை நோக்கி வாகனங்கள் சாரி சாரியாகப் பயணிக்க ஆரம்பித்தன.
காஞ்சி மாநகரமே ஜன சந்தடியால் திணற ஆரம்பித்தது. தங்களது ஊரில் வாழ்ந்த கருணை மகான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு காஞ்சி நகரத்து வியாபாரிகள் அனைவரும் தாங்களும் அஞ்சலி செலுத்துவதற்காக - எவரும் சொல்லாமல் - எந்த விதமான அடக்குமுறையும் இல்லாமல் கடைகளை அடைத்தனர்.
நாளிதழ் கடைகள், டீ-காபி, பூக்கடைகள் - இவை மட்டும் விதிவிலக்கு.
இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், வெளிநாட்டு அன்பர்கள், பொதுவாழ்வில் இருந்து வரும் பிரபலங்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், முதியவர்கள், இளைய தலைமுறையினர், மாணவர்கள் - என மகானுக்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்தவர்கள் நின்றிருந்த வரிசை சுமார் இரண்டரை கி.மீ.க்கு மேல் நீண்டிருந்தது.
பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட டெல்லி மற்றும் பல மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலிக்கு வந்தனர்.
வேதம், தேவாரம், நாமசங்கீர்த்தனம், திருப்புகழ், சஹஸ்ரநாம பாராயணம் என்று மகா பெரியவாளின் பூதவுடலைச் சுற்றி பக்தி மணம் கமழ்ந்தது.
‘பிருந்தாவனத்துள் இருந்து 700 வருடம் என் பக்தர்களைக் காப்பேன்’ என்றார் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்.
காஞ்சி மகா பெரியவாளும் அதுபோல் தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் என்பது அங்கே தினம் தினம் கூடும் பக்தர்களே சாட்சி!
மகா பெரியவா பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அந்த இரங்கல் தீர்மானத்தில், ‘காஞ்சி பெரியவர் ஸித்தி அடைந்த செய்தி - குறிப்பாக, தமிழகத்துக்கும் உலகின் பல பகுதியினருக்கும் பெரும் துயரம் அளிக்கும் செய்தியாகும். காஞ்சி பெரியவர் தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த எளிமையும், ஏழை, எளியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து ஆசிர்வதித்த தன்மையும் எல்லோராலும் போற்றிப் பாராட்டப்பட்டவை ஆகும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு ஆசி வழங்கியது, தானே கடைசி வரை கதர் அணிந்தது, வரதட்சணையை வெறுத்து ஆடம்பரம் இல்லாத திருமணங்களை செய்வித்தவை போன்றவை அவரது அரும் செயல்களில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.
இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் நம் தாய்நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பாத யாத்திரையாகத் தன் சுற்றுப்பயணத்தை அமைத்துக் கொண்டு மக்களை ஆசிர்வதித்த தன்மை வேறு எந்த ஆன்மிக பெருந்தகைக்கும் இல்லாது பரமாச்சார்யர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு ஆகும்’ என்று அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
அப்பழுக்கற்ற துறவிக்கு செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலி.
மகா பெரியவா அவதரித்த திருநட்சத்திரம் - அனுஷம்!
பிறந்த நட்சத்திரம், ஒருவருக்குப் பெருமை சேர்க்கும்.
ஆனால், அனுஷத்துக்கு மகா பெரியவா பெருமை சேர்த்திருக்கிறார்.
‘அனுஷம்’ என்றாலே இன்றைக்கு மகா பெரியவாதான் பலருக்கும் நினைவுக்கு வருகிறார்.
நன்றி: பி. சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தொகுதி-3. பதிப்பாளர்: ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்