இருபத்தைந்து வருட பத்திரிகை வாழ்க்கையை வேறு வழி இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டிய வேளை... அடுத்து என்ன செய்வதென்று குழப்பம்.
நாற்பதுகளில் செட்டில் ஆகி விட வேண்டும். அடுத்தடுத்து தாவுவதற்கும், ஃபீல்டையே மாற்றுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். சத்தியமாக எனக்கு அப்போது இல்லை.
‘பத்திரிகைப் பணியில் இருந்து வேறு ஒரு துறைக்கு நீங்கள் மாறி விடுங்கள்’ என்று என் நண்பர் இசைக்கவி ரமணன் சொன்னதும், இதெல்லாம் இனி சாத்தியப்படுமா என்று என் உள்மனம் யோசிக்க ஆரம்பித்தது.
பத்திரிகைப் பணியைத் தவிர்த்து வேறு என்ன தெரியும் எனக்கு?
பேலன்ஸ் ஷீட் போட்டுக் கணக்கு வழக்கு பார்க்கத் தெரியாது. கடையில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கி விட்டு, கல்லாவில் இருப்பவர் மிச்சம் தருகிற காசை அப்படியே பைக்குள் போடுகிற வர்க்கம் நான்.
இதற்கு, கணக்கு சட்டென்று பார்க்க வராதது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் கல்லாவில் இருப்பவர் மீது நம்பிக்கை.
ஒரு டீஸன்ட்டான கடை வைத்து வியாபாரம் செய்யும் அளவுக்கு, சாதுர்யம் எனக்குக் கிடையாது. பணத்தை வசூல் செய்வதில் சாமர்த்தியம் போதாது.
விகடனில் பணி புரிந்த காலத்தில் ஒரு தீபாவளியின் போது குஜராத் மாநில சூரத் நகருக்குச் சென்று விதம் விதமான புடவைகளை ஏராளமான வண்ணங்களில் அள்ளி வந்தேன்.
அப்போது தி.நகர், புரசைவாக்கம் போய் ஜவுளிக் கடைகளில் புடவை வாங்குபவர்களை விட, நாலைந்து கட்டைப்பைகளில் புடவைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ஆபீஸ் ஆபீஸாக ஏறி, விற்றவர்கள் அதிகம் உண்டு (இன்றைக்கும் சிலருக்கு இத்தகைய வியாபாரம்தான் சாப்பாடு போடுகிறது).
டிசைன் டிசைனாக இருக்கிற சூரத் புடவைகளைக் குறைந்த விலையில் வாங்கி, ஓரளவு லாபத்தில் விற்றால், நாலு காசு கூடுதலாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணம்தான்.
எதிர்பாராதபடி புடவைகள் நன்றாக விற்றன. ஆனால், எதிர்பார்த்தபடி பணம் வசூல் ஆகவில்லை.
கம்ப்யூட்டர் சம்பந்தமான உத்தியோகத்துக்குப் போகலாம்… போட்டோஷாப் கோர்ஸ் படிக்கலாம் என்றால், அதில் போதிய அனுபவமும் இல்லை; ஆர்வமும் இல்லை.
பணி செய்கிற பத்திரிகைக்குக் கட்டுரை தயார் செய்வதற்காக ஸ்விட்ச் போட்டு கம்ப்யூட்டர் உடனே ‘ஆன்’ ஆகவில்லை என்றால், அலுவலகத்தில் இருக்கிற நாலைந்து நண்பர்களுக்கு போன் போட்டு விடுவேன், என்ன பிரச்னை என்று.
நிலைமை இப்படி இருக்க… நான் எப்படி இதுவரை செய்து வந்த தொழிலை மாற்றிக் கொண்டு புது வேலைக்குப் போக முடியும்?
எல்லாவற்றையும் ரமணனிடமே சொல்லி, தீர்வு கேட்டேன்.
அவர் சொன்னார்: ‘‘ஸ்வாமீ… மகா பெரியவாளைப் பத்தி நிறைய படிச்சிருக்கீங்க… எழுதி இருக்கீங்க… அந்த அனுபவங்களையே மேடைகள்ல பேச ஆரம்பியுங்களேன்.’’
எனக்குப் பகீர் என்றிருந்தது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திருவிழாக் காலங்களின்போது வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் போன்றோர் பெரிய பிராகாரத்தில் பந்தல் போட்டுச் சொற்பொழிவாற்றுவதைக் கேட்டிருக்கிறேன்.
மேடைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிற பக்தகோடிகளை இங்கிருந்து நகர விடக் கூடாது என்பதற்காகவும், அவர்களது கவனத்தைத் திசை திருப்பக் கூடாது என்பதற்காகவும், பேச்சில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவும் ஆரம்பித்த பிரதான சப்ஜெக்ட்டில் இருந்து எங்கெங்கோ போவார்கள். ஆனாலும், அரை மணி நேரம் கழித்து, விட்ட இடத்துக்கே மீண்டும் வந்து மெயின் சப்ஜெக்ட்டுக்குள் புகுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் உலகத்தில், எனக்கு எப்படி சொற்பொழிவு சாத்தியப்படும்? பழக்கம் இல்லையே!
உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, ‘‘பேச்சு எனக்கு வராது சார். நான் எட்டிப் பார்க்காத துறையாச்சே’’ என்று பதில் சொன்னேன்.
சிரித்தபடியே ரமணன் சொன்னார்: ‘‘ஸ்வாமீ… நானே பேசுறேன்ல்ல… பலரும் கேக்கறாங்கல்ல.’’ இதுதான் அவரது பெருந்தன்மை.
‘‘அதில்லே சார். நிறைய நினைவில் வெச்சிருக்கணும். பத்திரிகைக்கு ஒரு கட்டுரை தயார் செய்யும்போது பஞ்சபாண்டவர்கள் அஞ்சு பேர்னா, யோசிச்சு யோசிச்சு அந்த அஞ்சு பேரையும் எழுதுவேன். இதே ஒரு சொற்பொழிவுக் கூட்டம்னா அந்த அஞ்சு பேரையும் எப்படி சரளமா என்னால் சொல்ல வரும்?’’ என்று கேட்டேன்.
‘‘எல்லாம் வரும் ஸ்வாமீ… இந்த உலகத்துல முடியாததுன்னு ஒண்ணும் இல்லவே இல்லை’’ என்றார் ரமணன் கண்களில் பிரகாசத்துடன்.
ஆம்! எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று எனக்கு சாத்தியமாக்கியவர் – நடமாடும் தெய்வமாக விளங்கி வருகிற காஞ்சி மகா பெரியவா!
அவர் என்னை ஆட்கொள்வதற்கு உண்டான தகுதிகள் எனக்கு இன்னும் வரவில்லை என்று தீர்மானித்து, ஒருவேளை நண்பர் ரமணன் மூலமாக எனக்குப் புரிய வைத்தாரோ, என்னவோ?!
‘‘சரி சார்… பார்க்கலாம்’’ என்று நம்பிக்கை இல்லாமல் சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தபோது இரவு மணி ஒன்பதைத் தாண்டி விட்டிருந்தது.
அன்றைய தினம் குரு பூர்ணிமா. ஆனி மாதப் பவுர்ணமி தினம். குருமார்களை வணங்குவதற்கும் போற்றுவதற்கும் உகந்த நாள். எப்படியேனும் இன்றைய தினம் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒரு எழுத்தாளர் கட்டுரை எழுதுகிறார் என்றால், அது அச்சுக்குப் போவதற்கு முன், மீண்டும் மீண்டும் படித்துப் பல முறை திருத்தம் போட முடியும். அவ்வளவு ஏன்? அச்சுக்குப் போன பின்னும் மெஷினை நிறுத்தி, முக்கியமான திருத்தங்களைச் செய்து பிறகு மெஷினை ஓட விடவும் முடியும்.
ஆனால், சொற்பொழிவு என்பது அப்படி அல்ல. ஒரு மேடையில் பேசுவதற்காக ஏறி சப்பணமிட்டு அமர்ந்து விட்டால், பேசுகின்ற வார்த்தைகள் அத்தனையும் ‘லைவ்’. அதாவது, பேசுகிற வார்த்தை ஒவ்வொன்றும் மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கிற பார்வையாளர்களை நேரலையாக அடைகிறது.
தவிர, அத்தனை பேரின் முகமும் கவனமும் பேசுகிறவர் மீது காணப்படும்.
ஒரு விஷயத்தை மேடையில் பேசி முடித்த பின், ‘மன்னிக்கணும். சற்று முன் நான் பேசும்போது இந்த வார்த்தையை இப்படித் தவறாக உச்சரித்து விட்டேன். அதுபோல் இன்னாரின் பெயரை இப்படித் தவறாகச் சொல்லி விட்டேன்’ என்றெல்லாம் மெஷினை நிறுத்தி கரெக்ஷன் போடுவது போல் மைக் முன்னால் திருத்தங்கள் அறிவிக்க முடியாது.
மேடையில் தவறாகப் பேசி விட்டால், பேசுபவருக்கு அறிமுகமானவர்கள் அனுதாபப்படுவார்கள். அறிமுகமில்லாதவர்கள் ஆவேசப்படுவார்கள்.
அன்றைய தினம் இரவு படுக்கையில் என் மனைவியும் மகளும் நன்றாக உறங்கி விட்டிருந்தார்கள். என் மகள் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து எனக்கு ஒரு நல்ல பணி வாய்க்க வேண்டும் என்ற கனவும், பிரார்த்தனையும் இந்த இருவருக்குமே இல்லாமல் இருக்க முடியாது.
கணவனின் கவுரவமான சம்பளத்தைப் பிறரிடம் சொல்வது மனைவிக்குப் பெருமை.
தந்தை உத்தியோகம் செய்கிற நிறுவனத்தின் பெயரை உடன் படிக்கிற தோழிகளிடம் சொல்லிப் பெருமைப்படுவது மகளுக்கு சந்தோஷம்.
அடி மனதில் இருக்கக் கூடிய உணர்வுகள்தான், உறக்கத்தில் சீர் தூக்கிப் பார்க்கப்படுகின்றன.
அவைதான் கனவுகளாக வருகின்றன.
எனவேதான், இரவு படுக்கச் செல்லும்முன் நல்ல நினைவுகளுடன் – நற்சிந்தனைகளுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு, கடவுளை தியானித்து விட்டுப் படுக்க வேண்டும். கனவே வந்தாலும், கெட்டவை வராது.
எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த குருபூர்ணிமா தினத்தில் எப்படியாவது ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே வெறுமனே படுத்துக் கொண்டிருந்ததில், தூக்கம் வரவில்லை.
இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அதிகாலை இரண்டேமுக்கால் மணி.
இப்படியும், அப்படியும் பல விதமான எண்ணங்கள் அடுத்தடுத்து வந்து அலைக்கழித்துக் கொண்டிருந்த பொழுதில் திடீரென ஒரு சிந்தனை என்னுள் எழுந்தது. பெரும் உத்வேகத்துடன் அது உதித்தது என்றே சொல்ல வேண்டும்.
ஆம்! ‘மேடைகளில் ஏறி பேச ஆரம்பிக்கலாம்… மகா பெரியவா பார்த்துக் கொள்வார்’ என்று திடமாகத் தீர்மானித்த முடிவு, அதிகாலை இரண்டேமுக்கால் மணிக்கு எடுக்கப்பட்டது.
பேசுவது என்பது என் தீர்மானம்.
இதை செயலாக்கம் பெற வைப்பது மகா பெரியவாளின் ஆசி என்று முடிவெடுத்தேன்.
நடக்கின்ற பருவத்தில் இருக்கின்ற குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தாயாகப்பட்டவள், பூமியைப் பார்த்து மெள்ள மெள்ள ஒவ்வோர் அடியாக எடுத்து வைப்பாள் அல்லவா? அதுபோல் நடமாடும் தெய்வமான மகா பெரியவா என் கையைப் பிடித்துக் கொண்டு செல்வதாக எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.
என் முதல் சொற்பொழிவே – சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் அமைந்தது என்பது மகா பெரியவா எனக்குக் கொடுத்த மிகப் பெரிய ஆசிர்வாதம்.
காஞ்சி மகா பெரியவாளின் திருவடி பட்ட புனித மண்டபம் அது. எண்ணற்ற ஞான வேள்விகள் நடந்த சபை அது. அங்கேதான் எனது முதல் சொற்பொழிவு.
‘அமுதசுரபி’ முன்னாள் ஆசிரியர் கலைமாமணி திரு விக்கிரமன் சார் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மேடை.
என் நலம் விரும்பிகளான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, ஸ்ரீகிருஷ்ண கான சபா பிரபு, நாட்டிய மேதை பத்மா சுப்ரமண்யம், இசைக்கவி ரமணன், ஆடிட்டர் சங்கரன், காளிகாம்பாள் கோயில் ஸ்ரீசண்முக சிவாச்சார்யர், சமையல் கலைஞர் ஜெய்மாஹி ஜெயராமன் – இப்படிப் பலரும் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிற மண்டபத்தில், சுமார் எழுநூறு பேருக்கும் மேற்பட்ட பக்தகோடிகள் திரண்டு அமர்ந்திருக்கக் கூடிய மண்டபத்தில் – நான் சரியாக சொற்பொழிவாற்றுவேனா, தங்குதடை இல்லாமல் பேசுவேனா என்கிற கவலை எனக்குக்கூட இல்லை.
ஆனால், ஒரே ஒரு ஜீவனுக்கு மட்டுமே இருந்தது.
அந்த ஜீவன் – என் மனைவி செல்லா!
காரணம் – அன்றைய தினம் இந்த சொற்பொழிவில் நான் சொதப்பி ஒருவேளை தோற்று விட்டால், அடுத்து எனக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது அவள் கவலையாக இருக்கலாம்.
ஆனால், அடுத்தடுத்து அமைந்த ஒவ்வொரு சொற்பொழிவிலும் மகா பெரியவா பிரத்யட்சமாக என்னுடன் இருப்பதை நான் உணர்ந்தேன்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி.சுவாமிநாதன்
மீள்பதிவு