அன்று காலை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் என் மூத்த சகோதரியின் இல்லத்தில் தங்கி இருக்கும் என் தாயாரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வயது எண்பது ப்ளஸ் (தாயார் இப்போது இல்லை. பகவான் திருவடிகளை அடைந்து விட்டார்).
இரண்டு நாட்கள் கழித்து என் தாயாருக்குப் பிறந்த நாள் (பங்குனி பூரட்டாதி). அவருக்குத் தருவதற்காக அஸ்தினாபுரத்தில் ஒரு கடையில் மதுரை சுங்கிடிப் புடவை வாங்கிச் சென்று கொடுத்து, நமஸ்கரித்தேன். நான் கொடுத்த புடவையை வாங்கியதும், தாயாரின் கண்கள் பனித்து விட்டன. எத்தனை பேர் புடவை வாங்கிக் கொடுத்தாலும், மகனோ, மகளோ வாங்கிக் கொடுத்தார்கள் என்றால் அது தாயாருக்குத் தனி சுகம். அதுதான் பாசம்.
அதோடு, நெகிழ்வான சம்பவம் ஒன்றை என் தாயார் நினைவு கூர்ந்தார். ஆனால், எனக்கு அது அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால், தாயார் உருக்கமாகச் சொல்லச் சொல்ல... எனக்கும் அந்த நிகழ்வு நினைவுக்கு வந்து என் கண்கள் கலங்கி விட்டன.
அந்த சம்பவம் இதுதான்:
இது நடந்தது 1988-89-ஆக இருக்கலாம். நான் சென்னைக்கு வந்த புதிதில் விகடனில் வேலை பார்த்தேன். அப்போது மயிலாப்பூரில் நடுத் தெருவில் (பயப்பட வேண்டாம். தெருவின் பெயரே இதுதான்) குடி இருந்தேன். தாயாரும் நானும் மட்டுமே வாசம். மறக்க முடியாத நாட்கள் அவை.
என் தாயாருக்கு அப்போது ‘ஃபிட்’ என்று சொல்லப்படும் இழுப்பு (கால்களில்) சில நேரங்களில் வரும். அத்தகைய வேளையில் அவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்தால், மனம் அப்படி வேதனைப்படும். பல நேரங்களில் தனக்கு இழுப்பு வந்தது எனக்குத் தெரியக் கூடாது என்பதற்காக புடவையால் தன் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வேதனையை வெளியே காட்டாமல் சமாளித்துக் கொண்டிருப்பார். இப்போது அதை நினைத்தாலும் மனம் ‘பகீர்’ என்கிறது.
அது ஒரு போகிப் பண்டிகை தினம். வீட்டில் போளி, வடை எல்லாம் தயார் செய்து விட்டு, நான் சாப்பிடுவதற்காகத் தான் சாப்பிடாமல் காத்திருக்கிறார் தாயார். ஏதோ ஒரு வேலையாக இருந்தேன். திடீரென்று என் தாயாரின் கால்களில் இழுப்பு வந்து விட்டது. சாதாரண இழுப்பல்ல. தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கிறது. வேதனையை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் சமாளித்துக் கொண்டு என்னை சிரித்தபடி பார்க்கிறார். ‘வா, உக்காரு... சாப்பிடு’ என்று அந்த வேதனையிலும் என்னை பண்டிகைச் சாப்பாடு சாப்பிடச் சொல்கிறார்.
அப்போது சாப்பிடுவதற்கு எந்த மகனுக்கு மனம் வரும்? கண்கள் கலங்க ஆரம்பித்தன. அக்கம்பக்கத்துக்காரர்கள் உதவ... உடனடியாக ஒரு ஆட்டோவில் என் தாயாரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்தேன். பிற்பாடு அவர் சரியாகிப் போனது வேறு விஷயம்.
நான் நெமிலிச்சேரி சென்ற அன்று என் தாயாரைச் சந்தித்தேன் என்று துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? அப்போது அம்மா என்னிடம், ‘அன்னிக்கு போகிப் பண்டிகைக்காக நான் செஞ்ச போளியையும், வடையையும் நீ சாப்பிடவே இல்லடா... ஒரு நாளும் கிழமையுமா உனக்கு இதெல்லாம் புடிக்குமேனு ஆசை ஆசையா செஞ்சு வெச்சேன். என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போற மும்முரத்துல நீ சாப்பிடவே இல்லைடா... சாப்பிடவே இல்லை’ என்று குரல் கமறச் சொல்லி, விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்.
என் மூத்த சகோதரியும் தேற்றினார். நானும் தேற்றினேன். அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகவில்லை. பிறகு, அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு, ‘விடும்மா... அதுக்குப் பிறகு அடிக்கடி போளி தின்னுண்டுதான் இருக்கேனம்மா’ என்று சொன்னதும் அனைத்தையும் மறந்து சிரிக்க ஆரம்பித்தார்.
‘அம்மா’ என்கிற உறவுக்கு ஈடு இணை உலகத்தில் எதுவுமே இல்லை.
அனைத்து மகளிர்களுக்கும் இது சமர்ப்பணம். என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
படம்: என் அப்பாவின் அறுபதாம் கல்யாணத்தின்போது (கும்பகோணம் கீழ டபீர் தெருவில் நடந்தது)