அவரது திருப்பாதங்கள் பணிவோம். ஆச்சார்யரது அருட்பார்வை அனைவரையும் புனிதம் ஆக்கட்டும்.
பாசம் துறந்து, பந்தம் மறந்து, ஆசைகள் விடுத்து ஆபத் சந்நியாசம் வாங்கினார் ஆதி சங்கரர் மிகச் சிறு வயதில்!
காஞ்சி ஸ்ரீமடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்புக்கு வருவது என்பது பால்யத்திலேயே நிகழ்ந்து விடும்.
எதுவும் புரியாத வயதில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பார்கள். காரணம், தெய்வத்தின் மனம்தான் குழந்தைக்கு.
பிஞ்சு முற்றுவதற்கு முன்னரே பக்குவப்படுத்த வேண்டும். அப்படித்தான் ஸ்ரீமடத்தின் பொறுப்புக்கு வரும் முன்னர் வேத பாடசாலை வாசம். உலக ஞானமும், துறவின் மேன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உரிய குருமார்களைக் கொண்டு சகல பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.
தங்களுடன் பள்ளியில் படித்த சிறார்கள் தெருவில் உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மகா பெரியவாளும், புதுப் பெரியவாளும், பால பெரியவாளும் தண்டம் சுமந்து பட்டத்துக்கு வந்து விட்டார்கள்.
ஒருவேளை சாப்பாட்டையே துறக்க முடியாமல் மூன்று வேளையும் தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விதம் விதமான பதார்த்தத்தை சுவைக்கப் பார்க்கிற வயதில் துறவறத்தை விரும்பி ஏற்பது என்பது சாதாரண விஷயமா?
தாயாரையும், தந்தையையும் பிரிந்து வருவது என்பது இயல்பான ஒன்றா?
அத்தனையையும் ஏற்று ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மையெல்லாம் உய்விக்க பீடாதிபதி ஆனார்.