Mahasankara Matrimony







Periyava

15/04/2021
உங்கள் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு அத்தனையையும் ஒரு கணம் மறந்து விட்டு, பூலோகத்தில் இருக்கிற எத்தனையோ கோடி மனிதப் பிறவிகளில் நானும் மிகச் சாதாரணமான ஒருவன் என்கிற எண்ணத்துடன் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்...

சென்னை மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடந்த ஒரு சொற்பொழிவின்போது இந்தப் படத்தை அடியேனுக்கு காண்பித்தார் பக்தர் ஒருவர். 'உங்களுக்குக் காண்பிக்கறதுக்குன்னே எடுத்து வந்தேன் சுவாமிநாதன் சார்" என்றார். படத்தைப் பார்த்தவுடன் பரவசம் மேலோங்கியது.

பின்னர் இணையத்திலும் இது கிடைத்தது.

ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உங்களது ஈகோ, செருக்கு, திமிர்... இன்னும் என்னென்ன துஷ்ட குணங்கள் இருக்கின்றனவோ, அனைத்தும் பொடிப் பொடியாகி விடும். புனிதம் பெற்று விடுவீர்கள்.

பள்ளத்தில் அமர்ந்து கொண்டு அண்ணாந்து பார்த்து ஆசி வழங்கும் அந்தப் பரந்தாம சொரூபத்தைப் பாருங்கள்...

கண்கள் கலங்குகிறது அல்லவா?

விதம் விதமான வடிவங்களில் கல் பாறைகள் அடுக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் கலியுக தெய்வம் எப்படி இறங்கி இருக்கும்? சற்றே சாய்வாக இருக்கும் ஒரு பாறையில் எப்படிக் கால்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறது அந்தப் பரப்பிரம்மம்?

ஆசி பெறுகிறவர் மேடான இடத்தில் இருக்கிறார். அவருடன் இருக்கிற சிறுமி மகளா, பேத்தியா அல்லது வேறு யாராவதா? என்னே ஒரு பாக்கியம்.

மகானே அண்ணாந்து பார்த்து ஆசி வழங்குகிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட பாக்கியவான்... இருவரும் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கும் பவ்யம், போலித்தனம் இல்லாதது... கண் குளிரத் தரிசிக்க வேண்டும் என்கிற ஏக்கத்துடன் தொலை தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.

மகானைச் சுற்றி இருக்கும் பொருட்களை பாருங்கள், மரச் சொம்பு, ஒரு மூங்கில் தட்டில் யாரோ வைத்த காணிக்கைகள், அதில் ஒரு மட்டைத் தேங்காய்.. ஏதோ ஒரு மூட்டை... அவ்வளவே..!

ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் அனு தினமும் வாதங்களும் விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், 'அதோ போகிறார் ஒரு உத்தம மகான்' என்று நாத்திகர்களும் கை நீட்டி அடையாளம் காண்பித்த மகான்... தன்னை நாடி வந்தவர்களின் பசிப் பிணி, நோய்ப் பிணி, வறுமைப் பிணி உட்பட அத்தனை பிணிகளையும் ஒரு பார்வை மூலமே குணமாக்கிய மகான்...

எளிமையையே மட்டுமே கைக்கொண்டு எல்லாவற்றையும் உதறிய மகான்...

வாருங்கள்... அவர் சொன்னதைக் கேட்பது - அதன்படி நடப்பது உங்கள் விருப்பம். முதலில், அவரை தரிசியுங்கள்... நித்தமும் அவரை ஏதேனும் ஒரு சொரூபத்தில் கண்டு ஆனந்தப்படுங்கள்... அவரே உங்களை மாற்றி விடுவார். அப்படித்தான் பலரும் மாறி இருக்கிறார்கள்.

மாற்றம் எல்லோருக்கும் உண்டு.

மகா பெரியவாளே... மகா தெய்வமே...

இந்த குரு வார நன்னாளில் குவலயத்தில் இருக்கின்ற அனைவருக்கும் குறைவில்லா வாழ்வை வழங்குங்கள்... கொரோனா என்கிற துயரைத் துடைத்தெறியுங்கள்!

எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தாருங்கள்...

கற்பகத் தருவே... நினது நிழலே பூலோக சொர்க்கம்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

* சில திருத்தங்களுடன் மீள் பதிவு.