Mahasankara Matrimony







Message from P.Swaminathan Mama

23/04/2021
வாழ்க்கைக் கணக்கை அவரவர்களே கற்றுக் கொள்ள வேண்டும்.

வகுப்புக் கணக்கைக் கற்றுத் தர ஆசிரியர்கள் உண்டு.

என் இதயத்தைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் என் வாழ்க்கையில் உண்டு.

ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

என்றும் என் நீங்கா நினைவில் இருப்பவர்!

9-ஆம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்தவர் திரு. எஸ். முத்துக்குமாரசாமி என்கிற எஸ்.எம்.கே.!

தடிமனான கண்ணாடி. நெற்றியில் திருநீறு. பேண்ட் - சட்டை. கும்பகோணம் நாணயக்காரத் தெருவாசம்.

சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவார். இந்த வரியை டைப் செய்யும்போது அவர் எப்படி சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருவார் என்பது அப்படியே என் கண்களுக்கு முன்னால் படம் போல் ஓடுகிறது.

அதிர்ந்து பேச மாட்டார்; கோபப்பட மாட்டார். எல்லா மாணவர்களுக்குமே இவரை ரொம்பவும் பிடிக்கும்.

ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு இவரிடம் டியூஷன் போனேன். மாதம் இருபத்தைந்து ரூபாய் என்று நினைக்கிறேன். ஒரு மாதம் முடிந்து விட்டால், தப்பித் தவறிக்கூட ‘டியூஷன் ஃபீஸ் என்னாச்சு?’ என்று கேட்க மாட்டார். நாமளே கொடுத்தால்தான் உண்டு.

கஷ்டப்பட்டுப் படித்தாலும், ஒன்றிரண்டு நாட்கள் தப்பினால், டியூஷன் ஃபீஸ் கொடுத்து விடுவேன்.

ப்ளஸ் டூ முடித்த பிறகு, வீட்டுச் சூழ்நிலை கல்லூரிக்குப் போகும்படி இல்லை. ஏதாவது வேலைக்குப் போனால் உசிதம் என்பது போல் இருந்தது. ஆனால், என் வீட்டில் (நான்தான் கடைசி. நாலாவது) யாருமே கல்லூரிக்குப் போகவில்லை.

நான் கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும் என்கிற ஆசை வீட்டில் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், ஃபீஸ் கட்ட வேண்டுமே! அப்போது (பி.எஸ்ஸி. கணிதம்) முதல் வருடக் கட்டணம் 225 ரூபாய் என்று நினைக்கிறேன். பணம் இல்லை. கல்லூரிக் கனவைத் துறந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் கணக்கு ஆசிரியர் எஸ்.எம்.கே-வைப் பார்க்க தற்செயலாக அவரது இல்லம் சென்றேன்.

‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார்.

சொன்னேன். ‘பணம் புரட்டுவது கஷ்டமாக இருக்கிறது சார்’.

அடுத்த விநாடியே, ‘நான் உனக்கு 225 ரூபாய் தருகிறேன். உன்னால் எப்ப முடியுமோ, அப்ப குடு. கணக்கில் நல்ல மார்க் வாங்கி இருக்கே (உண்மை. 172/200). காலேஜ் சேர்ந்துடு’ என்றார் எஸ்.எம்.கே.!

கல்லூரி சேர்ந்தேன். வீட்டுக்கு வீடு புத்தக சர்க்குலேஷன் போட்டு அவரிடம் பட்ட கடனை அடைத்தேன்.

பின்னாட்களில் விகடனில் சேர்ந்தேன். என்னுடைய முதல் நூல் ‘ஆலயம் தேடுவோம்’ விகடன் பிரசுரத்தில் வெளியானது. ‘இந்தப் புத்தகத்தை நீ யாருக்கேனும் சமர்ப்பணம் செய்யலாம்’ என்றார்கள் ஆசிரியர் குழுவில்.

எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது ஆசிரியர் எஸ்.எம்.கே.தான்! அவருக்கே இந்த நூலை சமர்ப்பணம் செய்தேன். அடியேனின் முதல் நூல் இதுதான்.

புத்தகம் வெளியான பின் இதன் பிரதியை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். பழம் இத்யாதிகளோடு புத்தகத்தையும் அவரிடம் கொடுத்து, வணங்கினேன். ரொம்பப் பெருமையாக என்னைப் பார்த்தார். அப்போது என் கண்கள் கலங்கி விட்டன.

என்னைப் புடம் போட்டு, எனக்குக் கல்லூரி முகவரி தந்த ஆசான் முத்துக்குமாரசாமி அவர்களே... இன்றைய தினம் மட்டுமல்ல... எல்லா தினங்களிலும் நீங்கள் என்னுள் இருந்து வருகிறீர்கள்.

உங்கள் புன்னகையும், அதிர்ந்து பேசாத தன்மையையும் மறக்க முடியுமா..!

வணங்குகிறேன் தங்களை.

விண்ணுலகில் இருந்த வண்ணம் ஆசி புரியுங்கள்!

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

* உலக புத்தக தினம் இன்று